மன்னாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுகாதாரத்துறையினர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மருந்து தட்டுப்பாட்டின் காரணமாகவும் மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு நீதி வேண்டியும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டமானது இன்று (06) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இடம்பெற்றது.

இதன்போது, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு சேவைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்ற போதும், அவசர சிகிச்சைக்காக நோயாளிகள் ஏனைய மாவட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றனர்.

மேலும் ஏனைய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு மாவட்ட வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டால் பாரிய நெருக்கடி நிலை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டிற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,மக்கள் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்களுக்கு தீர்வாக அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.