மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு : வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாதகாலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நேற்றைய தினம் அரசாங்க ஆதரவாளர்கள் தாக்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நேற்று இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை காலை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இன்றும் நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 4 பேர் காயமடைந்தனர்.

அத்துடன், நீர்கொழும்பிலும் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மேலும் கொழும்பு – அங்கொட பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 12ம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Previous articleதிருகோணமலையில் பதுங்கிய மகிந்த குடும்பம்
Next articleஇலங்கையில் துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப் படைகளுக்கு அனுமதி!