மரணமடைந்த நித்தி? – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியானந்தா

சாமியார் நித்தியானந்தாவைச் சுற்றும் சர்ச்சைகளுக்குப் எப்போதும் பஞ்சமில்லை.

கைலாசாதீவின் அதிபதி என கூறும் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர் மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் பறந்த நிலையில், நித்தியானந்தவிடமிருந்தே அது குறித்த விளக்கக் குறிப்பு வெளியாகியிருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் தன்னை போலீஸ் தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தென்பசபிக் பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றில் அடைக்கலம் ஆனதாகக் கூறப்படுகிறது.

அதனை கைலாசா என பெயரிட்டு , தினந்தோறும் சமூக வலைதளங்கள் மூலமாக சொற்பொழிவு ஆற்றி வந்தார் நித்தியானந்தா.

இந்தச் சூழலில்தான் , நித்தியானந்தா நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே ‘ஷூட்’ செய்த வீடியோக்களைத்தான் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் புது வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் தொடர்பாக, நித்தியானந்தா விளக்கமளித்திருக்கிறார்.

அதில், “27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை.

பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை.

மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.எனக்கு அறிமுகமானவர்களைக் கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். என கூறியுள்ளார் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா.