காதலி என எண்ணி இந்திய இராணுவ இரகசியங்களை பாகிஸ்தான் பெண் உளவாளிகளிடம் தெரிவித்த இந்திய இராணுவர்

இந்திய இராணுவ இரகசியங்களை அறிய பாகிஸ்தான் பெண் உளவாளிகளை பயன்படுத்துவது பற்றிய மேலுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருப்பதாக கூறி, பாகிஸ்தான் உளவுத்துறை பெண்ணொருவர் விரித்த வலையில் சிக்கி, இராணுவ இரகசியங்களை பகிர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் இராணுவ ரகசிய தகவல்களை பரிமாறியுள்ளார். கடந்த சில நாட்களாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 18ம் தேதி அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஹசீனா என்றும், இராணுவ செவிலியர் சேவை ஊழியர் என்றும் அந்த பாகிஸ்தான் பெண் உளவாளி இவரிடம் அறிமுகமாகி பழகி வந்துள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணிடமிருந்து பிரதீப் குமாருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. டெல்லியில் சந்தித்துப் பேசலாம் என்று காதலுடன் பேசியும், திருமணம் செய்துகொள்ள விருப்பமாக இருப்பதாகக் கூறியும் முக்கியத் தகவல்களை அந்த பெண் பிரதீப் குமாரிடமிருந்து பெற்றுள்ளார்.

பிரதீப் குமார் மீது அரசு ரகசியச் சட்டம், 1923-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பெண் உளவாளிகளின் வலையில் சிக்கிய இந்திய இராணுவத்தினர் அண்மை காலமாக கைதாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleபலத்த பாதுகாப்புடன் இன்று ஆரம்பமான க.பொ.த சாதாரணதர பரீட்சைகள்
Next articleமாத்தறையில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி மாயம்!