புயலின் காரணமாக கனேடிய தலைநகரம் மேலும் 4 நாட்கள் இருளில் மூழ்கும்!

கனடாவில் வீசிய சக்திவாய்ந்த புயலால் ஒட்டாவாவில் துண்டிக்கப்பட்டுள்ள மின் விநியோகம் மீட்டெடுக்க மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும் என்று ஒட்டாவா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் ஒட்டாவா பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த புயல் புரட்டியெடுத்தது. இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 170,000 மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கடும் அவதியில் சிக்கி உள்ளனர்.

இந்த நிலையில் நகர மேயர் ஜிம் வாட்சன் தெரிவிக்கையில், தற்போதைய சூழலில் ஒரு சில மணி நேரத்தில் மீட்டெடுக்கும் நிலையில் மின் விநியோகம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி மக்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும், இந்த இக்கட்டான சூழலில் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை வீசிய புயலானது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் ஒட்டாவா நகரத்தை துவம்சம் செய்தது. இதில் மரங்கள் வேருடன் சாய்ந்ததுடன், 200க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை மொத்தமாக சேதப்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஞாயிறன்று மட்டும் 5,000 வாடிக்கையாளர்களின் மின் விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 170,000 மக்கள் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் அவதிப்படுவதாகவும் ஒட்டாவா மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

Previous articleமாத்தறையில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி மாயம்!
Next articleகுரங்கம்மை அச்சத்தால் ஐரோப்பிய நாடொன்று அதிரடி உத்தரவு!