தனுஷை தங்கள் மகன் என கூறிய தம்பதியிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தனுஷ் !

தன்னை மகன் எனக் கூறி வழக்குப்பதிவு செய்துள்ள மதுரை தம்பதிக்கு ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவில் காணாமல் போன தனது மகன் கலைச்செல்வன் தான், திரைப்பட நடிகர் தனுஷ் என்று உரிமை கோரி இருந்தனர். மேலும், தங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராக தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அவரின் அங்க அடையாளங்களும் சரிபார்க்கப்பட்டன. கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் மகன் தனுஷ் என்பது குறித்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குளறுபடி உள்ளதாக கூறினார். தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் சரி பார்க்கப்பட்டு இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

இதையடுத்து,தங்களைக் கொலை செய்ய கஸ்தூரி ராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாக குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் இந்த குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என்று தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள கதிரேசன் மீனாட்சி தரப்பு எங்களுக்கு இது குறித்து எந்தவிதமான நோட்டீஸும் வரவில்லை கடந்த 15 நாள்களுக்கு முன்பு நாங்கள் தான் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Previous articleகுரங்கம்மை அச்சத்தால் ஐரோப்பிய நாடொன்று அதிரடி உத்தரவு!
Next articleஅபாய கட்டத்தில் உள்ள சிம்புவின் தந்தை? மருத்துவமனையில் அனுமதி!