யாழில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் யாழ். நகரில் சிறிது நேரம் பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என நம்பி யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இன்று காலை முதல் காத்திருந்த பொதுமக்கள், நீண்ட நேரமாகியும் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படாததால் விரக்தியடைந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சிறிது நேரம் காங்கேசன்துறை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டதுடன், குழப்பமான நிலை உருவானது. இதனையடுத்து அங்கு வருகை தந்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் வீதியை மறித்துப் போராடிய பொதுமக்களை சமரசப்படுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இன்று காலை முதல் யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலை முன்பாக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு வந்திருந்த பொலிஸார் இங்கு விநியோகம் இடம்பெறாது எனவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குச் செல்லுமாறும் தெரிவித்தனர்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

அங்கும் எரிவாயு சிலிண்டர் கிடைக்காத நிலையில், விரக்தியடைந்த பொதுமக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் பின்னராக மீண்டும் கொட்டடியில் அமைந்துள்ள எரிபொருள் களஞ்சியசாலை முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் களஞ்சியசாலையில் சேமித்து வைத்துள்ள எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்குமாறு அங்கு இருந்த பொலிஸாருடன் முரண்பட்டனர்.

நீண்ட நேரத்தின் பின்னர் அங்கு மேலதிகமாக பொதுமக்கள் ஒன்று கூடாதவகையில் தடுக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு கூடியவர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து யாழ். – அச்சுவேலி எரிபொருள் நிலையத்திலும் பெட்ரோலுக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.நேற்றிரவு பெட்ரோலின் விலையை 420 ஆக அதிகரித்துள்ள போதிலும் பொதுமக்கள் பெற்றோல் கொள்வனவில் முண்டியடிப்பதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Previous articleஅபாய கட்டத்தில் உள்ள சிம்புவின் தந்தை? மருத்துவமனையில் அனுமதி!
Next articleபொருளாதார சிக்கலினால் இலங்கை மாணவர்களை ஏற்றுக்கொள்ள தயங்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்