தன்னைத்தானே திருமணம் செய்ய ரெடியாகும் இளம் பெண்!

தன்னைத்தானே திருமணம் செய்து தேனிலவுக்கும் ரெடியாகும் இளம் பெண் தொடர்பில் தகவலொன்று வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்படவைத்துள்ளது.

இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர், இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலைச் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அதாவது சுய-காதலின் தீவிர வெளிப்பாடாக, 24 வயதான க்ஷமா பிந்து, எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார். இவர் வரும் ஜூன் 11ஆம் திகதி தன்னைத்தானே திருமணம் செய்து கொள்கிறார்.

இந்த திருமணமானது ஒரு பாரம்பரிய இந்து திருமணமாக இருக்குமாம். இதில் க்ஷாமா தனக்குத்தானே தாலி கட்டுவார். மேலும் ‘ஃபெராஸ்’ மற்றும் திருமண உறுதிமொழிகளும் இருக்கும். கோத்ரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற உள்ளதாம். அதேவேளை திருமணத்திற்குப் பிறகு, அந்தப் பெண் தன்னுடன் 2 வாரங்கள் தேனிலவு கொண்டாடவும் திட்டமிட்டுள்ளார்.

“பெண்கள் முக்கியம்” என்பதை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது தனது திருமணம் என க்ஷாமா கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

“நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகள் ஆக விரும்பினேன். அதனால் நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். இந்தியாவில் இப்படி ஒரு திருமணம் நடந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை நான்தான் முதலில் அவ்வாறு செய்திருக்கலாம். சுய-திருமணம் என்பது உங்களுக்காக இருப்பதற்கான உறுதிப்பாடு மற்றும் தனக்காக நிபந்தனையற்ற அன்பு என்றார்.

அதோடு இது சுயமாக ஏற்றுக்கொள்ளும் செயலும் கூட. மக்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் என்னை நேசிக்கிறேன், எனவே இந்த திருமணத்தை நான் விரும்புகிறேன்” என க்ஷாமா கூறுகின்றார்.

அதேவேளை க்ஷாமாவின் பெற்றோர் திறந்த மனதுடன் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்கிறார்களாம். இந்தநிலையில் அவரின் திருமணம்தான் இந்தியாவின் முதல் தனி திருமணம் என்று அழைக்கப்படுகிறது.