வவுனியாவில் குளத்தில் மூழ்கிய மாணவர்கள் : இருவர் சடலமாக மீட்பு!

வவுனியா – ஈரப்பெரியகுளத்தில் இன்று (02) நான்கு மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா – ஈரப்பெரியகுளத்தில் இன்று பிற்பகல் குளிப்பதற்காக தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த நால்வர் தமது வளர்ப்பு நாயையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது குளத்தில் குளித்து கொண்டிருந்த நால்வரில் இருவர் அங்கு நீரில் மூழ்கியுள்ளனர். இதை அவதானித்த மற்றைய இருவரும் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது அவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

குறித்த நால்வரையும் மீட்கும் முயற்சியில் அயலவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை அவர்களை மீட்பதற்கு அவர்களின் வளர்ப்பு நாயும் உதவியதாக பிரதேச மக்கள் கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அயலவர்களின் உதவியுடன் குளத்தில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட போது மற்றைய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த நதீச விதுசர (வயது 15) , கைலாஸ் (வயது 16) ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Previous articleஅரச ஊழியர்களுக்கு வழங்கி வந்த பாடநெறிகள் இடைநிறுத்தம்!
Next articleவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி யதுர்சியின் இறுதிக்கிரியை!