உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும் : மைத்திரிபால சிறிசேன

நாட்டில் தற்போதைய அரசாங்கம் மாறும் வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் வெளிநாடுகளின் உதவிகளை பெற வேண்டுமாயின் குறிப்பிட்ட காலத்திற்கு சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து, உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுவர் சீ.சேன் ஹொங்க் உடன் நேற்று பொலன்நறுவை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சீனத் தூதுவர் பொலன்நறுவை புதிய நகரில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தொடர்ந்தும் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என்ன கூறினாலும் நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

நாட்டின் உணவு உற்பத்தி சகல விதத்திலும் பாதிக்கப்பட்டுள்ளது. உரம், எரிபொருள், கிருமி நாசனி என்பன இல்லை. இந்த நிலைமையில், நெல் பயிர் செய்கை மாத்திரமல்ல, காய்கறி, பழங்கள், தேயிலை, தனியங்கள், சோளம் என அனைத்து உணவு உற்பத்திகளும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இப்படி அரசாங்கத்தை அமைத்துக்கொண்டு நெருக்கடியில் இருந்து மீள முடியாது. இதற்காகவே நாங்கள் சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு தொடர்ந்தும் கூறி வருகின்றோம்.

நான் இதனை அண்மையிலும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து, குறுகிய காலத்திற்கு அரசாங்கம் ஒன்றை அமைத்து, பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.

அப்போது பல உலக நாடுகள் எமக்கு உதவும் நாங்கள் பல ராஜதந்திர பிரிவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சர்வதேச நிறுவனங்களுடன் நான் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.

சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைத்து, தேர்தல் தினத்தை தீர்மானத்தால், பல நாடுகள் இதனை விட அதிகளவில் உதவும் என அவர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் தற்போதுள்ள பிரதான பிரச்சினை பட்டினி, உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பது. அதேவேளை 21 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தினால், உலக நாடுகள் உதவ முன்வரும்.

ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு அதிகாரம் செல்வதை விட நாடாளுமன்ற ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டால், உலக நாடுகளை அதனை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Previous articleவவுனியாவில் கிணற்றில் இருந்து மீட்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம்!
Next articleயாழில் வீடொன்றில் தங்கியிருந்த கள்ளக் காதலர்களுக்கு நையப்புடைப்பு!