திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் தோப்பூர் 59ம் கட்டை ஜின்னா நகர்ப் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான ஆர்.கொச்சிம்மா (63 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்து நோயாளி ஒருவரைப் பார்வையிடுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதி விட்டு மோட்டார் சைக்கிளைச் சம்பவ இடத்தில் விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட குறித்த சாரதியை புதூர் நீதவான் முன்னிலையில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleஅரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
Next articleவவுனியாவில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்!