தீ வைத்து எரிக்கப்பட்ட தனது வீட்டை பார்த்து அழுது புலம்பிய அமைச்சர்!

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட தனது வீட்டை நேற்று பார்வையிட சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது குடும்பத்தினர் அழுது புலம்புவதை காணக் கூடியதாக இருந்தது.

வீடு தீ வைத்து எரிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின்னர் அமைச்சர் பிரசன்ன தனது குடும்பத்துடன் வீட்டை பார்வையிட சென்றிருந்தார்.

அத்துடன் இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், பௌத்த பிக்குகள் மற்றும் கத்தோலிக்க மத குருமாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நான் தானம் வழங்கும் பிக்குமார் கொலைகளை செய்வது குறித்து மேடைகளில் ஏறி பேசுகின்றனர். அத்துடன் கடந்த மே 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பௌத்த பிக்குமாரும், கத்தோலிக்க மதகுருமாருமே தலைமைத்துவத்தை வழங்கினர்.

இதனை நான் நாடாளுமன்றத்திலும் கூறினேன். வெளியில் வந்து தற்பேது மீண்டும் கூறுகிறேன், முடிந்தால், வழக்கு தாக்கல் செய்யுங்கள் என்று சவால் விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வர்த்தகர் ஒருவரிடம் 64 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பாக தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும்,25 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மே 9 ஆம் திகதி சம்பவங்களுக்கு பின்னர், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் மக்கள் மீது விரோத போக்குடன் பேசுவது மற்றும் திட்டுவது, ஊடகங்களுக்கு முன்னால் அழுவது அரசியலாகி இருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக பௌத்த பிக்குகள் வீடுகளை தீயிட்ட சம்பவங்களுக்கு தலைமை தாங்கினர் என்று வேறு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தால், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தளவு எதிர்ப்புகளை வெளியிடுவார்கள் என்பது கூறி தெரிய வேண்டிய விடயமல்ல.

எனினும் தற்போது அவர்களுக்கு நாடு, இனம் மற்றும் மதம் சம்பந்தமாக காட்டிய போலியான பற்றும் மறைந்து போயுள்ளமை தெளிவாகியுள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.