எரிபொருளுக்கு வரிசையில் நின்ற நபர் மரணம் : சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் இருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதி நேற்றிரவு முதல் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக தனது முச்சக்கர வண்டியின் முன் ஆசனத்தில் அமர்ந்து வரிசையில் காத்திருந்துள்ளதுடன் இன்று அதிகாலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை ஹிரண, விசல் உயன பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதான முத்துதந்திரிகே சுகத் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது மகன் அதே எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய மற்றுமொரு வரிசையில் காத்திருந்துள்ளார்.

தந்தை மயங்கி கிடப்பது குறித்து அருகில் இருந்தவர்கள் மகனுக்கு அறிவித்துள்ளனர். மகன் தந்தையை முச்சக்கர வண்டியின் ஆசனத்தில் சாய்ந்திருப்பதை கண்டுஇ அப்பா என அழைக்கின்றார்.

தந்தை பதிலளிக்காத காரணத்தில் தந்தை தலையை பிடித்த போது தலை சாய்ந்துள்ளதுடன் மகன் கதறி அழும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

முச்சக்கர வண்டியில் உயிரிழந்த நபரும் மற்றுமொரு நபரும் நேற்று ஒன்றாக உணவு சாப்பிட்டு விட்டுஇ எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்துள்ளனர்.

மயங்கி கிடந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அவசர அம்புலன்ஸ் சேவைக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த போதிலும் எவரும் வரவில்லை என அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் அதிகாலை வரை பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தக் கூடிய சம்பவமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் நாட்டில் வரிசை யுகத்தை ஏற்படுத்திய அரசியல்வாதிகள் அனைவரையும் சபித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாணந்துறை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் அண்மைய காலத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நின்றவர்களில் 5க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். ஒருவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்தார்.

Previous articleயாழில் விடுதிகளை சோதனையிட்டபோது சிக்கிய தென்னிலங்கை யுவதிகள்!
Next articleமின்வெட்டு குறித்து வெளியான தகவல் : அதிர்ச்சியில் இலங்கை மக்கள்!