இஷான் கிஷன் மீது ஐபிஎல் போட்டியின் போது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கபில் தேவ்!

இஷான் கிஷன் மீது ஐபிஎல் போட்டியின் போது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, முன்னாள் வீரர் கபில் தேவ் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில், இஷான் கிஷன் 15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் அவர் நிறைய போட்டிகளில் சொதப்பினார்.

எனினும், 14 போட்டிகளில் 418 ஓட்டங்கள் குவித்திருந்தார். இது கடந்த இரண்டு சீசன்களை விட அதிகம் தான். அவர் தொடர்ந்து போட்டிகளில் சோதப்பியபோது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

ரசிகர்கள் மட்டுமின்றி, டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சனும் கடுமையாக கிஷனை விமர்சித்தார். 15 கோடிக்கு வாங்குவதற்கு எல்லாம் அவர் தகுதி வாய்ந்தவர் இல்லை என வாட்சன் கூறினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இஷான் கிஷன் மூன்று போட்டிகளில் 76, 34, 54 என ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதனால் அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், இஷான் கிஷனுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘அதிக தொகை தான் இஷான் கிஷானுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்துவிட்டது. எந்தவொரு அணி நிர்வாகமும் அவ்வளவு பணத்தை செலவு செய்ய முட்டாள்கள் கிடையாது. அந்த வீரரின் தரம் என்னவென்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், வீரர்கள் தான் அவ்வளவு பணத்தை கண்டு அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

மிகப்பெரும் வீரர் யுவராஜ் சிங்கிற்கே இதுபோன்று நடந்துள்ளது. 2014ம் ஆண்டு டெல்லி அணி அவரை 14 கோடிக்கு வாங்கியது. அவர் 14 போட்டிகளில் 376 ஓட்டங்களை சேர்த்தார். அதன் பின்னர் தினேஷ் கார்த்திக், பதான் சகோதரர்கள் ஆகியோர் பெரும் பணத்திற்கு சென்று அழுத்தத்தால் சொதப்பியுள்ளனர். அதில் இருந்து இளம் வீரர்கள் மீண்டு வந்து சுதந்திரமாக ஆட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.