கனடாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கையைச்சேர்ந்த கனேடிய பொலிஸ் அதிகாரி!

கனடாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்களில் விபத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கனடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டுள்ளார்.

விபத்தை அடுத்து உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“மிகவும் சோகத்துடன், எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்பதை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்” என்று ஒட்டாவா காவல்துறை புதன்கிழமை காலை ட்வீட் செய்துள்ளது.

மதியழகன் எப்போதும் நல்ல மனநிலையில் இருந்ததாகவும், அவர் புன்னகையுடன் இருந்ததாகவும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். மதியழகன் இலங்கையில் பிறந்து ஒட்டாவாவில் வளர்ந்தார், அவரது குடும்பத்தில் இளைய பிள்ளையாவார்.

எவ்வாறாயினும், இந்த விபத்து அவர் கடமையில் இல்லாதபோது நிகழ்ந்ததாக ஒட்டாவா பொலிஸார் இன்று காலை அறிவித்துள்ளனர்.

இவரது மறைவு காரணமாக அனைத்து ஒட்டாவா காவல்துறை கட்டிடங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. விபத்து தொடர்பில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.