யாழில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு! பெண் உட்பட 4 பேர் கைது, ஒரு பகுதி நகைகள் மீட்பு…!

யாழ்.பருத்தித்துறை – துன்னாலை மடத்தடி பகுதியில் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு நடத்தி கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 5 1/2 பவுண் நகைகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர். மேலும் குறித்த நகைகளை உடமையில் வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக் கதவினை உடைத்து வாள்களுடன் உள்நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களை சேதப்படுத்தியதுடன்

வீட்டிலிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை ஏற்படுத்தி சுமார் 12 தங்கப் பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். படுகாயமடைந்தவர்கள் மந்திகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜித் லியனகேயின் பணிப்புக்கு அமைய

தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பலாலி பகுதியில் வைத்து 36 வயதுடைய ஒருவரும் முடவத்தையைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவரின் சகோதரர் தப்பித்துள்ளார்.

மேலும் ஒர் ஆணும் கொள்ளையிட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். ஏனைய மூவர் தேடப்பட்டு வருகின்றனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாள்களும் கைப்பற்றப்பட்டன.மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்கள் நால்வரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

Previous articleயாழில் நள்ளிரவு தாண்டியும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!
Next articleவவுனியாவில் இடம்பெறவிருந்த மரக்கடத்தலை முறியடித்த பொலிஸார்!