முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம்!

முல்லைத்தீவு – விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றிரவு கடமையில் நின்ற இராணுவத்தினருடன் பொதுமகன் ஒருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட போது கைகலப்பாக மாறிய நிலையில், இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக குறித்த பகுதியில் அமைதியின்மை நிலவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சில மணிநேரங்கள் பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியில் விசுவமடு பகுதியில் எவரும் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு அதிகளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

முள்ளியவளையில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொது பயன்பாட்டிற்கு எரிபொருள் இல்லை என எவருக்கும் வழங்கப்படாத நிலையில், தனியார் பேருந்து ஒன்றுக்கு எரிபொருள் வழங்கியதால் அங்கு கூடிநின்ற வாகன சாரதிகளுக்கும், எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸார் அங்கு வரவளைக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்க அதிபரின் அனுமதியுடன் போக்குவரத்து சேவைக்காக வந்த பேருந்துக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் அதற்கான அனுமதி கடிதத்தினை பொலிஸாரிடம் காட்டியுள்ளனர்.

வீதியில் நின்ற சாரதி ஒருவர் தனது டிப்பரினை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கொண்டுவந்து தனக்கும் எரிபொருள் வழங்குமாறு கூறியதை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் நின்ற சாரதிகள் எரிபொருள் நிரப்பிய தனியார் பேருந்தினை எடுக்கவிடாது சூழ்ந்தமையினால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் பிரசன்னத்தினை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்ற டிப்பர் ஒன்றிற்கு மாத்திரம் எரிபொருள் வழங்க வெளியில் நின்ற ஏனைய சாரதிகளின் கோரிக்கைக்கு அமைய டீசல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நின்ற பேருந்தினை வெளியில் எடுத்துள்ளனர்.

இதன்போது முரண்பாட்டினை ஏற்படுத்திய சாரதிகளும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.