பெட்ரோலுடன் நாட்டை வந்தடையவுள்ள கப்பல் : மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

நாளை மறுதினம் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதி டீசல் அடங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு – கொம்மாந்துறை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 145 லீற்றர் பெற்றோல் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில், தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சுகாதார சேவையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார சேவையில் ஈடுபடும் ஏனைய பணிக்குழாமினர் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளுக்காக மக்களின் காத்திருப்பு தொடர்கிறது.

மேலும் சில இடங்களில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.