யாழ். முதல்வருக்கும் கனடிய தூதுவருக்கும் இடையே இடம்பெற்ற திடீர் சந்திப்பு!

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் (David McKinnon)இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் மாநகர சபையின் முதல்வர் மணிவண்ணன் மற்றும் ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நினைவுச் சின்னங்களும் வழங்கி பரிமாறப்பட்டன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனை, யாழ்ப்பாண மாநகரத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நாடு இவ்வாறான நிலைமைக்கு போனதற்கான காரணங்கள் தொடர்பாகவும் கனடிய தூதுவர் கேட்டறிந்துக் கொண்டார்.

அதேவேளை நாட்டின் அபிவிருத்திக்கும் மாநகரத்தின் அபிவிருத்திக்கும் 3 தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தம் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான விடயங்கள் தொடர்பாகவும் கனடிய தூதுவருக்கு மணிவண்ணன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.