உலக சாதனை படைத்த இலங்கை!

பொருளாதார, டொலர், உணவு ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் சாதாரண மக்களுக்கான எரிபொருள் விற்பனையை நிறுத்தி இலங்கை உலக சாதனை ஒன்றை படைத்திருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைய காலத்தில் தனது மக்களுக்கு எரிபொருள் விற்பனையை நிறுத்தி ஒரே நாடு இலங்கை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையிடம் தற்போது 9 ஆயிரம் தொன் டீசலும் 6 ஆயிரம் தொன் பெட்ரோலும் கையிருப்பில் உள்ளது. இந்த எரிபொருள் ஒரு வாரத்தை சமாளிக்க மாத்திரம் போதுமானதாக இருக்கும்.

சுகாதாரம், போக்குவரத்து உட்பட அத்தியவசிய சேவைகளுக்கு மட்டுமே தற்போது எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.

எனினும் இதுவும் போதுமான அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என அத்தியவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு எரிபொருள் கிடைக்கும் என அமைச்சர்கள் கூறினாலும் கிடைக்கும் காலத்தை சரியாக கூறவில்லை.

இந் நிலைமையில் ஒரு வாரத்திற்குள் எரிபொருள் கிடைக்காது போனால், அத்தியவசிய சேவைகளையும் நடத்த முடியாது, முழு நாடும் செயலிழந்து போகும்.

கோவிட் தொற்று நோய் மற்றும் எரிப்பொருள் விலை அதிகரிப்பு போன்ற கட்டுப்படுத்த முடியாத காரணங்களும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் மேற்கொண்ட வரி குறைப்பு என்பன இந்த நெருக்கடிக்கு அடிப்படையான காரணங்களாக அமைந்துள்ளன.

நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மூன்று பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் சிலர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

எவ்வாறாயினும் நாணய நிதியத்தின் இந்த கடனுதவியை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என தெரியவருகிறது.

சர்வதேச நாணய நிதியம் இணங்கினாலும் கடனை பெற்றுக்கொள்ள குறைந்தது ஆறு மாதங்களாவது செல்லும் என இலங்கையின் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

Previous articleயாழில் தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் மீது சரமாரி வாள்வெட்டு..!
Next articleகா.பொ.த. சாதாரணதர விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம்!