நாட்டின் 08வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார்!

இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகளைப் பெற்று அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் நம்பிக்கை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரை தோற்கடித்து புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த மே மாதம் மக்கள் எதிர்ப்பு காரணமாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், கடந்த ஜூலை மாதம் மக்கள் எதிர்ப்பு காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகியதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதியின் எஞ்சியுள்ள பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்ததுடன், 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. 219 வாக்குகள் செல்லுபடியாகும், 4 வாக்குகள் செல்லாதவை என அடையாளம் காணப்பட்டது.

இதன்மூலம், முன்னர் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்வியடைந்து எம்.பி ஆசனத்தையும் கூட இழந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Previous articleஜனாதிபதி செயலகத்தின் முன் சத்யா கிரக போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!
Next articleயாழில் போதைப்பொருள் ஊசி பாவித்த 20 வயது இளைஞர் மரணம்!