இந்த தாக்குதல் செயலால் ரணில் தனது அங்கீகாரத்தை ஒரே நாளில் இழந்து விட்டார் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு இருந்த ஜனநாயக, தாராளமயவாத தலைவர் என்ற அங்கீகாரத்தையும் 45 ஆண்டுகளாக அரசியல் அனுபவத்தையும் ஒரே நாளில் இழந்து விட்டதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்ட களத்தின் மீது இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான இராணுவ மற்றும் பொலிஸ் தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இதற்கான பொறுப்பை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஏற்கவேண்டும். இந்த இடத்தில் பல கேள்விகள் எழுக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கவுக்கு தனக்கு இருந்த ஜனநாயக, தாராளமயவாத தலைவர் என்ற அங்கீகாரத்தையும் 45 ஆண்டுகளாக அரசியல் அனுபவத்தையும் ஒரே நாளில் இல்லாமல் ஆக்கிக்கொண்டுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் உள்ள ஜனநாயக சகல நண்பர்களை பகைத்துக்கொண்டு, மிகவும் அவப்பெயருக்கு உள்ளாகியதே தற்போது நடந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கும், மே 6 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வந்த ராஜபக்ச குடும்பத்தின் வன்முறையாளர்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கும் இடையில் எவ்வித வித்தியாசங்களும் இல்லை.

ஒன்று அரச பலத்தை பயன்படுத்தி மேற்கொண்ட சம்பவம் மற்றையது வன்முறையாளர்களை கொண்டு மேற்கொண்ட சம்பவம். உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் என்ன தேவை, ஏன் இந்த போராட்டம் ஏற்பட்டது.

போராட்டகாரர்கள் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கியதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் தனி உறுப்பினராக இருந்து ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வந்தார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச அதேபோல் கோட்டாபய ராஜபக்ச மூன்று அதிகார தூண்களை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டில் ஜனநாயகத்திற்கு வழியை திறந்து விடவே போராட்டகாரர்கள் போராட்டத்தை நடத்தினர்.

போராட்டகார்கள் மத்தியில் அநாகரீகமான மற்றும் வன்முறையான அடையாளங்கள் தென்பட்டிருக்கலாம்.

எனினும் ஆறு மாத காலமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மிகப் பெரியது. பால் மா இன்றி அழும் குழந்தைகளுடன் தாய்மார், வைத்தியசாலைகள், மருந்தகங்களுக்கு சென்றால், மருந்து கிடைக்காது கஷ்டப்படும் மக்கள், எரிபொருள் இன்றி துன்பப்படும் நாட்டின் சாதாரண மக்கள்.

வருமானத்தை இழந்த கமத்தொழிலாளர்கள், மீனவர்கள் உட்பட நாட்டில் கஷ்டப்படும் மக்கள்.

இவர்களின் வேதனை, ஆத்திரம் என்பன மேலோங்கி இருக்கும் சந்தர்ப்பத்தில், அவர்களுக்கு அனுதாபத்தை காட்ட வேண்டிய அத்தியவசியமான நேரத்தில், காட்டியுள்ள துஷ்டத்தனம் மற்றும் அநாகரீகமான இந்த செயல் மிகவும் அருவருப்பானது.

அத்துடன் சர்வதேச அங்கீகாரத்துடன் நாட்டில் கட்சிகளுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்தி, சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைத்து, ஜனநாயக எல்லைகளை விரிவுப்படுத்தி, உலகில் உதவிகளை வழங்கும் நிறுவனங்களிடம் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில், இந்த தாக்குதல் சம்பவமானது அனைவரையும் பகைத்துக்கொண்டமையாக அமைந்துள்ளது.

இது எந்த வகையிலும் நாட்டுக்கு உகந்த நிலைமையல்ல. மிகவும் அமைதியான போராட்டகாரர்கள். உண்மையில் அவர்கள் போராட்ட களத்தில் இருந்து வெளியேறி செல்லவிருந்தனர்.

அவர்கள் மத்தியில் இருந்த சிலர் என்ன கூறினாலும் அதில் இருந்த பெரும்பாலான மக்கள் அங்கிருந்து செல்வே இருந்தனர். அவர்களை அமைதியான பேச்சுவார்த்தை மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்த தேவையான சந்தர்ப்பம் இருந்தது.

இப்படியான சந்தர்ப்பம் இருந்த போது, அதனை செய்யாது, அவர்களை பாதுகாப்பு படையினரை பயன்படுத்தி விரட்டி, விரட்டி தாக்கியமை மற்றும் துப்பாக்கி பலத்தை பயன்படுத்தியமையானது மக்களை அடிப்படைவாத குழுக்களை நோக்கி தள்ளிவிடும் செயலாக அமைந்துள்ளது.

இப்படியான நடவடிக்கைகள் ஆயுதப்புரட்சி பற்றி கனவு காணும் சக்திகளுக்கும், ஜனநாயக விரோத சக்திகளுக்கு உந்து சக்தியை கொடுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் இப்படியான விதத்தில், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட சந்தர்ப்பங்களில் வடக்கிலும் அதேபோல் தெற்கிலும் அனைத்து இடங்களிலும் ஆயுதங்களை கையில் எடுத்த போராட்டங்கள் காரணமாக நாடு மேலும் மோசமான நிலைமைக்கு சென்றதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

அதேபோல் லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளுக்கு சென்றதுடன் பல தலைமுறைகளின் எதிர்காலம் இருண்டு போனது.

இன்று கறுப்பு தினம். இந்த கறுப்பு தினத்தில் ஜனநாயகத்தை நோக்கி பயணிக்க நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் நிபந்தனையின்றி ஒன்றிணையுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

அதேபோல் ராஜபக்ச குடும்பம் தம்மால் செய்ய முடியாத இந்த துஷ்ட அடக்குமுறையை தம்மால் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்ட ஜனாதிபதி மூலம் செய்துக்கொண்டமை குறித்து நாங்கள் கவலையடைக்கின்றோம் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.