விரைவில் பாஸ்போர்ட் பெற சிறப்பு வசதி!

வெளிநாட்டு ஊழியர்களின் கடவுச்சீட்டுகளை விரைவாக வழங்குவதற்காக சிறப்புப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லியில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்தில் இந்த விசேட பிரிவு திறக்கப்பட்டுள்ளது.

முன்னோடித் திட்டமாக நேற்று (22) இந்தப் பகுதி திறந்து வைக்கப்பட்டு, அதன் வெற்றியை அடுத்து, இன்று (23) முதல் அனைத்து வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனூடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் நெரிசல்கள் காரணமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல சிரமங்களை தவிர்க்க முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வெளிநாட்டு வேலைக்காகப் புறப்படுவதற்குத் தேவையான அடிப்படைப் பணிகளை நிறைவு செய்த விண்ணப்பதாரர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கிய கடிதத்தை இத்திணைக்களத்தின் இச்சிறப்புப் பிரிவில் சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்.

மேலும் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் விமான நிலையத்தில் விசேட நுழைவு வாயில் திறக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .