பிரதமர் பதவியை ஏற்கத் தயாராகும் : கோட்டாபய வெளியான அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை வந்த பின்னர் பிரதமராக பதவியேற்க தயாராக இருந்தால் எமக்கு ஆட்சேபனை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகோடாகியோ ஆகியோரிடம், கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்க விரும்புகிறீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

“எங்களுக்கு வேண்டும். கண்டிப்பாக வாக்களிப்போம். கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாட்டிற்கு வர வேண்டும். அவர் பாதுகாக்கப்பட வேண்டும். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

அவர் 69 மில்லியன் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஆவார். அப்படியென்றால் அவர் பிரதமரானால் யாருக்குத்தான் பிடிக்காது? நான் அதற்கு எதிரானவன் அல்ல, அவர் கேட்டால் நாங்கள் அவருக்கு வாக்களிப்போம்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பவுள்ளதாகவும், அவர் நாடு திரும்பியதும் கட்சியில் உயர் பதவி வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.