எரிபொருள் பெற நின்றவர் மீது காலால் உதைத்த இராணுவ அதிகாரிக்கு ஏற்பட்ட சிக்கல் !

குருநாகல் யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற நின்ற நபரை உதைத்த இராணுவ லெப்டினன்ட் கேணல் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இச்சம்பவத்தில் மற்றுமொரு இராணுவ வீரரும் மேற்படி நபரை தாக்கியதை அவதானித்த நிலையில், அவரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அணிவகுப்பின் வாரியபொல முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்த லெப்டினன்ட் கேணல் விராஜ் குமாரசிங்க மீது இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் பிரதீப் அத்தநாயக்கவே தாக்கப்பட்டுள்ளார்.

தம்புள்ளை யக்கபிஹிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் எட்டி உதைத்ததாக இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவிய செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் கிடைத்தவுடன் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், எரிபொருள் முறையாக விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இரண்டு பேர் பொதுமக்களை பிடித்து இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவரிடம் ஒப்படைத்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.