இலங்கையில் மருத்துவ ஆலோசனை கட்டணங்கள் பாரியளவில் உயர்வு : சிரமத்துக்குள்ளான நோயாளிகள்!

இலங்கையில் மருத்துவ ஆலோசனைக் கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன.

இந்நிலையில், தனியார் சிகிச்சை மையங்களில் சிறப்பு மருத்துவர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மருத்துவக் கட்டண அதிகரிப்பால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், தனியார் வைத்தியசாலைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவ ஆலோசனைக் கட்டணமாக 2400 ரூபா அறவிடப்பட்டதாகவும் தற்போது அந்த தொகை 3500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.