கோட்டாபய ராஜபக்சவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்க முடிவு !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலில் தொடர்ந்து ஈடுபடத் தீர்மானித்தால், அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ச, அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடும் எண்ணம் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல, முன்னாள் ஜனாதிபதிக்கு தனது பதவியை வழங்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில் இன்னும் உரிய முறையில் கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அரசியலில் தனது எதிர்காலம் குறித்து எதுவும் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்டு 3ஆம் திகதி காலை நாடு திரும்பினார்.

கொழும்பில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதை அடுத்து கோட்டாபய ராஜபக்ச ஜூலை மாதம் பதவி விலகினார்.

எனினும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட பலர், முன்னாள் ஜனாதிபதியை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleகடூழிய சிறைத்தண்டனையில் இருந்து விடுதலையாகி திரைப்படங்களில் நடிக்க தயாராகும் ரஞ்சன்!
Next articleநடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் பண மோசடி முறைப்பாடு !