யாழில் போதைப்பொருளுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாடசாலை மாணவர்கள் கைது !

யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் மதுபானம் மற்றும் மாவா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நால்வரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று நண்பகல் யாழ்.பிறவுண் வீதியிலுள்ள கோவில் கேணியடியில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸ் புலனாய்வுக் குழு, மாவா போதைப்பொருளை வைத்திருந்த மாணவனை கைது செய்துள்ளது.

மற்ற மூவரும் குடிபோதையில் இருந்தனர். நால்வரும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்றதாகவும், நண்பரின் பிறந்தநாள் விழாவில் மது அருந்தியதாகவும் மாணவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.

அவர்கள் 17 மற்றும் 18 வயது நிரம்பிய க.பொ.த முடித்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாணவர்களின் பெற்றோரை அழைத்து பிள்ளைகள் மீது கண்காணிப்பு இல்லை என எச்சரித்தார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாணவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தார்.