போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பஸ் சாரதிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐஸ் மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள்களை பயன்படுத்தி பொது போக்குவரத்து பஸ் சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகள் மற்றும் பஸ் கண்டக்டர்களை கண்டறிய விசேட கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்குரிய சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள் தடயவியல் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவ்வாறான 27 பேர் அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சில பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நீண்டகாலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமின்றி தலைநகரின் பணக்கார இளம் பெண்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர் என்றார்.

பொலிஸாருக்கு பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மாத்திரம் பார்க்க முடியுமா, வேறு யாரையும் பார்க்க முடியாதா என கெமுனு விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.