மலையகத்தில் இடம்பெற்ற மண்சரிவில் பெண் ஒருவர் பலி!

நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக திம்புள்ள – பட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுன்ட்வெர்னன் உப பிரிவு தோட்டத்தில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் இன்று (03.10.2022) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதான ராமசாமி காளியம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மகளுடன் சமயலறையில் இருந்த போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த பெண்ணின் மகள் உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலையக பிரதேசங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த திம்புள்ள பத்தனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலவும் சீரற்ற காலநிலையினால் மண்சரிவு அபாயம் உள்ளதால், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Previous articleதிருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleயாழ்.பல்கலைகழகத்திற்கு சீனா வழங்கிய உதவி!