வடக்கில் போதை பொருள் பாவனையை தடுக்க வருகிறதாம் கருணாவின் படையணி!

வடக்கில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் ‘அம்மான்’ படையணி என்ற அமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்  உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெய சரவண தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

எமது கட்சியின் தலைவர் கடந்த வாரம் வடக்கிற்கு விஜயம் செய்து முன்னாள் போராளி ஒருவருக்கு உதவிகளை வழங்கினார். அந்த நிகழ்வில் அவர் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார்.

அதாவது, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்  ஒரு அங்கமாக, நமது நாட்டின் வளர்ச்சியை இளைஞர்களின் கைகளில் ஒப்படைக்கும் நோக்கில், அம்மான் படையணி என்ற அமைப்பை உருவாக்க உள்ளோம்.

தலைமைப் பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளார். இந்த அம்மான் படை உலகம் முழுவதும் விரிவடைந்து வளர்ந்து வருகிறது.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சில மாதங்களில் எங்களின் இலக்கை அடைவதற்கான திட்டத்தில் கண்டிப்பாக செயல்பட்டு வருகிறோம்.

எதிர்வரும் மாதங்களில் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் பாரிய வேலைத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். கருணா அம்மானை முறைப்படுத்துவதில் இந்த நடவடிக்கையும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.