விவசாயிகளுக்கு கரம் கொடுக்கும் கிழக்கு பல்கலைக்கழகம்!!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் சமூக இணைப்பிற்கான மையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் என்பன இணைந்து “பொருளாதார நெருக்கடி மற்றும் ஒருங்கிணைந்த விவசாயத்திற்கான தீர்வுகள்” எனும் தொனிப்பொருளில் மாவட்ட விவசாயிகளின் எதிர்கால நன்மை கருதிய விசேட கலந்துரையாடலொன்று இன்று (10) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் சமூக இணைப்பிற்கான மையத்தின் பணிப்பாளரும் கிழக்குப் பல்கலைக்கழக வைத்திய சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி கே.அருளானந்தம் தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக வைத்திய சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட அரசடி வளாகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலிற்கு விசேட விருந்தினர்களாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வல்லிபுரம் கணகசிங்கம், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.பகீரதன், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் விவசாயப் பிரிவிற்கான தலைவரும் மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் தலைவருமான வீ.ரஞ்சிதமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் விவசாயப் பிரிவிற்கான செயலாளர் அருளானந்தராஜா ரமேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய சூழலில் பாரிய சவாலுக்குள்ளாகி வரும் நிலையிலுள்ள விவசாயத்தையும் அதனை மேற்கொள்ளும் விவசாயிகளுக்குமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இடம்பெற்ற குறித்த ஆரம்பக்கட்ட கலந்துரையாடலின்போது விவசாயத்துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகள், விவசாயத்துறைக்காக கிழக்குப் பல்கலைக்கழத்தினால் ஆற்றப்படவுள்ள சேவைகள், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் சமூக இணைப்பிற்கான மையத்தினால் விவசாய துறைக்காக ஆற்றப்படவுள்ள விடயங்கள், நவீன முறையிலான விவசாய திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விடயங்கள், காலநிலை மற்றும் ஒட்டு முறைகள், சுகாதாரமான உணவு உற்பத்தி தொடர்பான மேலும் பல விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், வளவாண்மைகளும் அனுபவப்பகிர்வுகளும் இடம்பெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் வைத்திய நிபுணர் அருள்ஜோதி, கரடியனாறு விதைப்பண்னையின் பிரதிப்பணிப்பாளர் சிவநேசன்,
தொழில்நுட்ப ஆலோசகர் நாகலிங்கம் சுரேஸ்குமார், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் சமூக இணைப்பிற்கான மையம் ஆரம்பிக்கப்பட்ட நாள்
தொடக்கம் சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட செயற்பாடுகளை கிழக்குப் பல்கலைக்கழகம் ஆற்றிவருகின்றதுடன் அதன் ஒரு செயற்பாடாகவே விவசாயத்துறையை கட்டியெழுப்பும் நோக்கில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் சமூக இணைப்பிற்கான மையத்தின் பணிப்பாளரும் கிழக்குப் பல்கலைக்கழக வைத்திய சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி கே.அருளானந்தம் இதன்போது தெரிவித்தார்.