15 வயது மனைவியை அடித்துக் கொன்ற 27 வயது கணவன்; வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டு ‘எஸ்கேப்’!

15 வயது சட்டபூர்வமற்ற மனைவியான சிறுமியை அடித்துக் கொன்ற 27 வயதான கணவரும், மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று (11ஆம் திகதி) கைது செய்யப்பட்டதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பெமுல்ல, கம்பஹா, புலத்கங்கொட பகுதியைச் சேர்ந்த ‘சஞ்சு’ என்ற புனைப்பெயர் கொண்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெயாங்கொடை கட்டுவாஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த நடிசி பிரியங்கனி தட்சராணி என்ற சிறுமியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பதினைந்து வயது சிறுமியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் புலத்கங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 10ம் திகதி இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது சந்தேகநபர் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரால் தாக்கப்பட்டு சுகயீனமுற்றிருந்த சிறுமியை நேற்று (11) காலை சந்தேகநபர் காரில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் உயிரிழந்திருந்ததை உறுதி செய்தனர்.

அந்த சமயத்தில், சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த இருவரும் மாயமாகியிருந்தனர்.

வைத்தியசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பாதுகாப்பு கமெரா அமைப்பைச் சோதித்ததன் பின்னர் காரும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டதை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மற்றும் காரின் சாரதியை இன்று (12) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleயாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சி, பெற்றோர் தடுத்ததால் வீடு தீக்கிரை! பொலிஸார் அசமந்தம் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம்..!
Next articleயாழில் 4வயதுச் சிறுமியை தாக்கி சித்திரவதை செய்த தந்தை கைது!