துயிலுமில்லத்தை துப்புரவு செய்த மக்களை இராணுவ முகாமிற்கு அழைத்து 27ம் திகதி விளக்கேற்ற கூடாது என மிரட்டல்! விளக்கேற்றுவோம் என பதிலளித்த மக்கள்…!

மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி மேற்கொண்டிருந்தவர்களை இராணுவ முகாமிற்கு அழைத்து இராணுவ அதிகாரி மிரட்டிய நிலையில், எங்கள் உறவுகளை அஞ்சலிப்பதை தடுக்க முடியாது. என பதிலளித்த பொதுமக்கள் மீண்டும் வந்து துயிலும் இல்லத்தை துப்புரவு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் முள்ளியவளை மாவீரர் துயலும் இல்லத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தை ஆக்கிரமித்து படைமுகாம் அமைத்துள்ள 592 ஆவது பிரிகேட் முகாமின் கட்டளை அதிகாரி இராணுவ முகாமுக்கு அழைத்து விசாரணையில் மேற்கொண்டுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் விஜிந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான அமலன், ஜெகன் ஆகியோரும் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இணைந்து

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் துப்பரவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அப்பகுதிக்கு வருகைதந்த இராணுவத்தினர் விசாரணைக்காக தமது இராணுவ முகாமுக்கு வருகைதருமாறு ஏற்பாட்டாளர்களை அழைத்துள்ளனர்.

இதன்படி இராணுவ முகாமுக்கு சென்ற ஏற்பாட்டாளர்களை விசாரித்த 592 ஆவது பிரிகேட் முகாமின் அதிகாரி மாவீரர் நாளினை இப்பகுதியில் அனுஷ்டிக்க முடியாது என எச்சரித்ததோடு இப்பகுதி முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமான பகுதி எனவும்

வேண்டும் என்றால் நீங்கள் துப்பரவு செய்யலாம் ஆனால் 27ஆம் திகதி சுடர் ஏற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதற்க்கு பதிலளித்த ஏற்பாட்டு குழுவினர் இப்பகுதி பிரதேச சபைக்கு சொந்தமான பகுதி அதனையே நாங்கள் துப்பரவு செய்கின்றோம்.

இறந்த எமது உறவுகளை நினைவு தடை எதுவும் இல்லை என அரசாங்கம் கூறியுள்ள போதிலும் இராணுவத்தினர் இவ்வாறு நடந்துகொள்கின்கிறீர்கள். இருந்தாலும் எமது உறவினர்களை நினைத்து நாங்கள் அஞ்சலிப்பதை தடுக்க வேண்டாம்.

என கூறிவிட்டு மீண்டும் வந்து துயிலும் இல்ல வளாகத்தை துப்பரவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள இராணுவத்தினர்

அப்பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளதோடு கல்லறைகள் இருந்த பகுதியில் புத்தர் சிலை ஒன்றையும் அரச மரம் ஒன்றையும் நாட்டி வழிபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.