எரிபொருள் விலை அதிகரிப்பு !

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளதோடு பல்வேறு துறைசார் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சீனா எரிபொருள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தைகளில் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் நெல் விவசாயிகள் எரிபொருள் தட்டுப்பாடு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனினும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், இலங்கையின் விவசாய மற்றும் கடல்சார் நடவடிக்கைகளுக்காக 1 கோடியே 6 லட்சம் லீற்றர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 75 லட்சம் லிட்டர் எரிபொருள் விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும். குறித்த எரிபொருள் எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் நெற்பயிர்ச் செய்கையின் போது இந்த அளவு எரிபொருளை வழங்க முடியாவிட்டாலும், நெல் அறுவடையின் போது வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க சீனாவினால் விவசாயிகளுக்கு இந்த அளவு எரிபொருள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.