யாழில் வயல் நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள தனியார் வீட்டுத் தொகுதியினால் அருகில் உள்ள வயல்களில் உவர்நீர் வடியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அலுமினிய தொழிற்சாலைக்கு பின்னால் உள்ள தனியார் காணியில் சுமார் 70 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.

சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படவுள்ள மேற்படி வீட்டுத் தொகுதிக்கான வீதி, உப்பு நீர் தடுப்பணைக்கு அருகில் உள்ள வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டு வருகின்றது.

பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புத் திட்டத்துக்குச் செல்லும் சாலையின் அருகே உள்ள தடுப்பணையின் தாழ்வான பகுதியில் மண் அள்ளுவதால், கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்படுவதுடன், இனி வரும் காலங்களில் வயல்களும் உப்பாக மாறும்.

அதேவேளை நெற்பயிர்ச் செய்கையை வாழ்வாதாரமாகக் கொண்டு அப்பகுதியில் வாழும் குடும்பங்கள் முற்றாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமின்றி, மேற்படி புதிய குடியிருப்புத் தொகுதியில் நான்குக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுவதால், அப்பகுதி முற்றிலும் உப்பளமாகிவிடும்.

குறித்த திட்டத்திற்காக வேலணை பிரதேச செயலாளரின் அனுமதியுடன் அரச காணி ஊடாக இரண்டாவது வீதி அமைக்கப்படவுள்ளதால் வயல்களில் இருந்து உபரி நீர் வெளியேறும் திசை மாறி, நீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மறுபுறம், குறித்த திட்டத்துக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் உள்ள பனை மரங்கள் இரவோடு இரவாக வெட்டி எரிக்கப்பட்டதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.