யாழ் சகோதரிகளிடம் ஏமாந்த புலம்பெயர் தமிழர் ; விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்!

நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து சுமார் 120 மில்லியன் ரூபாவை மோசடி செய்த யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 23 வங்கிக் கணக்குகள் ஊடாக நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடமிருந்து சந்தேகநபர்கள் இரு பெண்களும் 120 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்த அவர்களது தந்தை ஒரு பணக்கார தொழிலதிபர் என்றும், ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தங்க நகைகள் உட்பட நிதி சொத்துக்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நிதியை விடுவிப்பதற்கான சட்டச் சிக்கல்களைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் இருவரும் தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்தார்.

அவரது முறைப்பாட்டின் அடிப்படையில் சகோதரிகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் பல்வேறு அரசு அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் கையெழுத்திட்ட கடிதங்கள் உட்பட ஏராளமான போலி ஆவணங்களை வைத்திருந்தனர்.

வங்கி புத்தகங்கள் மற்றும் வங்கி சீட்டுகளும் அவர்களிடம் இருந்தன. இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சகோதரிகள் இருவரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.