மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க பாலினத்தையே மாற்றி பெண்ணாக மாறிய தந்தை

மனைவியிடம் வளர்ந்து வரும் தன் மகள்களை சட்டப்படி தன் வசம் அழைத்துச் செல்வதற்காக, ஈக்வடாரில் தந்தை ஒருவர் தன் பாலினத்தையே மாற்றிக் கொண்ட வினோத சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமரிக்க நாடான ஈக்வடார் நாட்டில் ஒரு தம்பதி விவாகரத்து கோரும் போது, அவர்களுடைய பெண் குழந்தைகள் தாயிடமே வளர வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

ஆனால், சட்டத்திற்காக தன் பாசத்தை கட்டுப்படுத்த முடியாத தந்தை ஒருவர், தன் மகள்களுக்காக பாலினத்தையே மாற்றிக் கொண்டு தாயாக மாறி இருக்கிறார்.

ரெனே சாலினாஸ் ராமோஸ்க்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ராமோஸும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அந்நாட்டு சட்டப்படி பெண் குழந்தைகள் தாயிடம் தான் இருக்க வேண்டும் என்பதால், ராமோஸின் இரண்டு மகள்களும் அவரது மனைவியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர்.

ஆனால், தன் மனைவியும், அவரது குடும்பத்தாரும் தனது மகள்களைக் கொடுமைப்படுத்துவதாக கேள்விப் பட்டுள்ளார் ராமோஸ். அதோடு, கடந்த ஐந்து மாதங்களாக மகள்களைப் பார்க்க முடியாமலும் தடுக்கப்பட்டுள்ளார். எனவே, தனது மகள்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்துவிட அவர் விரும்பியுள்ளார். சட்டப்படி அதற்கு முயற்சித்த போது, அவர் தந்தை என்பதால், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு வித்தியாசமாக தீர்வு காண முடிவு செய்தார் ராமோஸ். அதனைத் தொடர்ந்து மகள்களுக்காக தன் பாலினத்தை அவர் மாற்றிக் கொண்டார். பெண்ணாக மாறிய ராமோஸ், தனது அடையாள அட்டையிலும் தனது பாலினத்தை பெமினினோ (FEMENINO) என மாற்றிக் கொண்டார்.

இப்போது தானும் ஒரு பெண் தான், எனவே தன் குழந்தைகளுக்கு தன்னால் நல்ல ஒரு அம்மாவாக இருக்க முடியும்’ எனக் கூறி, மனைவியிடம் இருந்து மகள்களை மீட்டுத்தரக் கோரி நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் ராமோஸ். தான் பெண்ணாக மாறியதற்கான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார். பெற்ற மகள்களுக்காக தந்தை பெண்ணாக மாறிய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.