உள்ளூராட்சி தேர்தலில் வாக்குப்பெட்டிகள் தொடர்பில் வெளியான தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மர வாக்குப் பெட்டிகளை மாத்திரம் பயன்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் இந்த தேர்தலுக்கு பயன்படுத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி அரச அச்சக அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தேர்தல் காலத்தில், அரசியல் கட்சி அல்லது குழு அல்லது வேட்பாளரை விளம்பரப்படுத்த அல்லது மற்றொரு தரப்பினருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு அரசு சொத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வாக்கெடுப்பு நடைபெறும் மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றை வரையறுக்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.