Home இந்திய செய்திகள் சாலைகளில் குழிகளை நிரப்பி மகனுக்கு அஞ்சலி நெகிழ வைக்கும் காய்கறி வியாபாரி

சாலைகளில் குழிகளை நிரப்பி மகனுக்கு அஞ்சலி நெகிழ வைக்கும் காய்கறி வியாபாரி

201602020245262005_On-the_SECVPFசாலைகளில் எங்கு குழிகளை பார்த்தாலும் ஒருவரின் கால்கள் தானாக நிற்கின்றன. ஓடிச்சென்று குழிகளை அவரது கைகள் நிரப்புகின்றன. அந்த வேலை முடிந்த பின் ரோட்டில் வேறு எங்கும் குழிகள் உள்ளதா? என இவரது கண்கள் தேடுகின்றன.

உயிரை பறித்த குழி
அரசும், அதிகாரிகளும் செய்ய வேண்டிய வேலையை செய்து வரும் அந்த நபரின் பெயர் தாதாராவ். அந்தேரி, மரோல் விஜயாநகர் பகுதியில் வீதியில் தள்ளுவண்டியில் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரி. இரவு, பகல் பாராமல் கடினமாக உழைப்பவர். தன்னை போன்று கஷ்டப்பட கூடாது என்பதற்காக தனது மகன் பிரகாசை ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைத்தார்.

மகன் படித்து பெரிய ஆளாக வருவான் என்று கனவு கண்டார். ஆனால் அவரது கனவுகள் எல்லாம் நொடிப்பொழுதில் சுக்குநூறாகி விட்டது. அதற்கு காரணம், ஜோகேஸ்வரி – விக்ரோலி லிங் ரோட்டில் கிடந்த ஒரு குழி தான்.

மீளாத்துயர்
பள்ளிப்படிப்பை முடித்த 16 வயது பிரகாஷ் டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை 28–ந் தேதி பாண்டுப்பில் உள்ள ஒரு தனியார் பாலிடெக் கல்லூரிக்கு சென்று விட்டு தனது உறவினர் ராம் என்பவருடன் மோட்டார் சைக்களிலில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் ரோட்டில் மழைநீரால் மறைக்கப்பட்டு இருந்த குழியில் மோட்டார் சைக்கிள் விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரகாசின் தலை ரோட்டில் வேகமாக மோதியது. மூக்கு, காது வழியாக ரத்தம் வெளியேறிய நிலையில், பிரகாஷ் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரகாசின் உயிரிழப்பு தாதாராவின் குடும்பத்தினருக்கு பேரிடியாக அமைந்தது. மேலும் ஒட்டு மொத்த குடும்பத்தையும் மீளாத்துயரில் ஆழ்த்தியது.

மகனுக்கு அஞ்சலி
அன்று முதல் தனது மகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சாலைகளில் எங்கு குழிகளை பார்த்தாலும் ஓடிச்சென்று நிரப்பி வருவதாகவும், அது மனநிறைவை தருவதாகவும் தாதாராவ் கூறுகிறார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:–

என் மகனுக்கு நிகழ்ந்தது போன்று யாருக்கும் நடக்க கூடாது. அவன் ரொம்ப நல்ல பையன், புத்திசாலி. எனது மகள் கஷ்டபடக்கூடாது என்பதற்காக மகன் உயிரிழந்த துக்கத்தை வெளிக்காட்டாமல் எங்கள் கண்ணீரை மறைத்து வருகிறோம். மகன் பிரிந்ததை தொடர்ந்து மகிழ்ச்சியும் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டது. வேறு எந்த பெற்றோருக்கும் இந்த நிலை ஏற்பட கூடாது என்பதே எனது நோக்கம். அதற்காக சாலைகளில் கிடக்கும் குழி, பள்ளங்களை நிரப்பி வருகிறேன். இதை செய்யும் என்னை ஆரம்ப நாட்களில் பலர் வேடிக்கை பார்த்தனர். தற்போது சிலர் என்னுடன் சேர்ந்து ரோட்டில் உள்ள குழிகளை நிரப்பி வருகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியம்
எனது மகன் பலியான சம்பவத்தில், அலட்சியமாக இருந்ததாக மாநகராட்சி மீதும், ஜோகேஸ்வரி – விக்ரோலி இணைப்பு சாலை பராமரிப்பு நிறுவனம் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் விபத்து நடந்து 6 மாதங்கள் ஆகியும் இன்று வரை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இது வேதனையை தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அலட்சிய அதிகாரிகளால் தாதாராவிற்கு இழந்த மகன் இனி திரும்ப கிடைக்க போவதில்லை. ஆனால், குறைந்தபட்சம் நீதியாவது கிடைக்குமா?.