கோட்டாபய, மஹிந்த உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கனடா அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிரடித் தடை

இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ, அதே போல் இராணுவ அதிகாரி சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்காக கனடா தடைகளை விதித்துள்ளது.

இதனை வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) நேற்று அறிவித்தார்.

கனடாவின் சிறப்பு பொருளாதார நடவடிக்கை விதிமுறைகளின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட நபர்கள் கனடாவிற்குள் நுழைய மறுக்கப்படுகிறார்கள்.

கனடாவின் குடிமக்கள் தடைசெய்யப்பட்ட நபர்களுடன் கனடாவிற்குள் அல்லது அதற்கு வெளியே எந்தவொரு நிதி, பொருளாதாரம் அல்லது சொத்து தொடர்பான உறவுகளைப் பேணுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் விதித்த தடைக்கு வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கனடாவின் பதில் உயர் ஸ்தானிகர் டானியல் பூட்டை இன்று வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைத்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒருதலைப்பட்சமான தடைகளை கனடா அரசாங்கம் அறிவித்ததற்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கனடாவில் இவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படுவதுடன், அவர்கள் எந்த வகையிலும் நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.