இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளித்த இந்தியா !

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்க இந்தியா உத்தியோகபூர்வமாக முடிவு செய்துள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத முக்கிய நபரை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவின் கடன் மறுசீரமைப்பு அறிவிப்பு வெளியாகும் வரை, பொருளாதார ரீதியாக நலிவடைந்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன் டாலர்கள் பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இலங்கையின் பிரதான கடன் வழங்குனராகக் காணப்படுகின்ற இந்தியா நேற்று (16-01-2023) இந்த முடிவை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பான அறிவிப்பை இந்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (18-01-2023) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் இந்த கடன் மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்புடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என கூறப்படுகிறது