சட்டமா அதிபர் நீதித்துறையில் தலையிடுவதாகக் கூறி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சட்டமா அதிபர் நீதித்துறையில் தலையிடுவதாகக் கூறி, சட்டத்தரணிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (18.01.2023) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதவான் தரங்கா மஹவத்தவை சட்டமா அதிபர் தடுக்க முயற்சித்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீதித்துறையின் சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு முயற்சியையும் கூட்டாக தோற்கடிப்போம் என சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மையான இடம் வழங்கப்பட்டுள்ள நாட்டில், நல்லெண்ணத்துடன் சிறிதம்ம தேரருக்கு, பிக்குகளுக்கு அனுமதிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்களை நீதவான் வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் நீதவானுக்கு எதிராக ஏதேனும் முயற்சி நடந்தால் சட்டத்தரணிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.