ரம்புக்கனையில் இளைஞர்கள் கொலை: நால்வர் கைது!

ரம்புக்கனை, ஹூரிமலுவ பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை போலீஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘ஹூரிமலுவே ஃபர்ஹான்’ என அழைக்கப்படும் மொஹமட் நிசார் மொஹமட் பர்ஹான், அப்துல் லத்தீப் மொஹமட் மற்றும் இக்கொடூரக் குற்றத்திற்கு உதவிய இரு சந்தேக நபர்களும் புத்தளம் நகரில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாவனல்லை – கிரிங்கதெனிய மற்றும் கெரமினியவத்தை பகுதியைச் சேர்ந்த மொஹமட் இக்பால் மொஹமட் அஸ்ஹர் (26) மற்றும் மொஹமட் அன்வர் மொஹமட் அர்ஷாத் (28) ஆகிய இருவர் கடந்த வருடம் நவம்பர் 19 மற்றும் 28 ஆம் திகதிகளில் காணாமல் போயுள்ளதாக, காணாமல் போன இருவரின் உறவினர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, குறித்த பகுதியில் வசிக்கும் போதைப்பொருள் வர்த்தகருக்கு சொந்தமானது என கூறப்படும் ரம்புக்கனை, ஹுரிமலுவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறம் புதைக்கப்பட்ட நிலையில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கடந்த 12ஆம் திகதி மீட்கப்பட்டன.

இந்த நிலையில், கொலையுடன் தொடர்புடைய ஹூரிமலுவே பர்ஹான் உட்பட நான்கு பிரதான சந்தேகநபர்கள் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியிருந்ததுடன் மேலும் இரு சந்தேகநபர்கள் கடந்த 15 ஆம் திகதியன்று மாவனெல்ல மற்றும் வெலிஓயாவில் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்காக குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் நேற்று குற்றத்துடன் தொடர்புடைய வீட்டிற்கு, மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து சென்றனர்.

அதன்படி, ஹூரிமலுவே ஃபர்ஹானின் தந்தை வீட்டில் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் ஒரு இரும்பு கம்பியை காவ்லதுறையினர் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் இன்று (20) கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.