கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தி, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணை முடியும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், உயர்நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரினால் இன்று பரிசீலிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாய்தமருதைச் சேர்ந்த அஹமட் லெப்பை மொஹமட் சலீம் மற்றும் அஹமட் ரஹீம் மொஹமட் அஸீம் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தாம் வசிக்கும் பகுதி சாய்ந்தமருது நகர சபைக்கு சொந்தமானது. எனினும் தாம் கல்முனை மாநகர சபைக்கு உரியவர்கள் என அண்மைய வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

இது தமது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அம்பாறையில் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஆகியோருக்கு பதில் மனுக்களை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மீண்டும் உத்தரவிட்டுள்ளனர்.

Previous articleரம்புக்கனையில் இளைஞர்கள் கொலை: நால்வர் கைது!
Next articleபதவியிலிருந்து விலகினார் முஜிபுர் ரஹ்மான்! நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு