Home இந்திய செய்திகள் அமெரிக்க தரத்தில் மேற்கொண்டாலும் கெயில் எரிவாயு திட்டம் வேண்டாம்: விவசாயிகள் வேண்டுகோள்

அமெரிக்க தரத்தில் மேற்கொண்டாலும் கெயில் எரிவாயு திட்டம் வேண்டாம்: விவசாயிகள் வேண்டுகோள்

gail_2258753fகெயில் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டம் வேண்டாம் என கேரள, கர்நாடக விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனமான‌ கெயில் கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் வழியாக 871 கி.மீ தொலைவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளது.

இத்திட்டத்திற்காக கேரளாவில் 501 கி.மீ, தமிழகத்தில் 310 கி.மீ, கர்நாடகாவில் 60 கி.மீ தொலைவுக்கு ரூ. 3,400 கோடி மதிப்பில் குழாய் பதிக்கும் பணிகளில் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், திரிசூர், எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் வாழும் விவசாயிகள் இந்த திட்டத்திற்காக தங்களின் நிலத்தை பறிகொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள 136 கிராம விவசாயிகள் தங்களது நிலத்தை பறிகொடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் தக்ஷினா கன்னடா, சாம்ராஜ்நகர், மண்டியா, பெங்களூரு ஆகிய மாவட்ட விவசாயிகளிடம் இருந்து எரிவாயு குழாய் அமைக்க நிலம் பறிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குழுவாக திரண்டு மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். தமிழகத்திலும் போராட்டம் வெடித்தது.

இந்நிலையில், கர்நாடக, கேரள விவசாயிகள் இந்த திட்டத்தை அமெரிக்க தரத்தில் வழங்கினாலும், நஷ்ட ஈட்டை பன்மடங்கு உயர்த்தி வழங்கினாலும் மத்திய மாநில அரசுகள் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

எரிவாயு குழாயின் காரணமாக நிகழும் ஆபத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும்.

இல்லாவிடில் இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளும் விவசாய அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அளித்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் விவசாய விளைநிலங்கள் வழியே கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க உச்சநீதிமன்றம் அனுமதி
அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சிக்குரியதாகும்.

தமிழக அரசும் தமிழக எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக விளைநிலங்கள் வழியே கெயில் எரிவாயு குழாய்களை அமைக்கக் கூடாது என திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடி தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் உச்சநீதிமன்றம் மூலமாக மத்திய அரசு உத்தரவைப் பெற்றிருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியும் துரோகமுமாகும்.

தமிழக மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சர்வநாசமாக்கும் இந்த நாசகார எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு சாதகமான தீர்ப்புக்கு எதிராக அரசியலமைப்பு சாசன அமர்விடம் தமிழக அரசு உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும்.

தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில்தான் கெயில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதனையும் மீறி தீர்ப்புகளைக் காட்டி இத்தகைய படுபாதக கெயில் எரிவாயு குழாய்களை விளைநிலங்கள்
வழியே பதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் விவசாய பெருங்குடிமக்களை ஒன்றுதிரட்டி அதைத் தடுக்கும் நடவடிக்கையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இறங்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.