கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்!

நேற்று (22-01-2023) புத்தளம் கோழி இறைச்சி விற்பனை நிலையத்தின் உரிமையாளரின் சடலம் மீட்கப்பட்டது.

புத்தளம் வான் வீதியைச் சேர்ந்த பி.எம்.ஜனாப் (வயது 63) என்ற குடும்பஸ்தரே குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோழி இறைச்சி விற்பனை நிலையத்தின் உரிமையாளரான உயிரிழந்தவர் நேற்று வழமை போன்று வியாபாரத்திற்காக கடையை திறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், மதிய உணவுக்கு அந்த நபர் வீடு திரும்பாததையடுத்து, அந்தக் கோழிக்கறி விற்பனை நிலையத்திற்கு குடும்பத்தினர் சென்றனர்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், புத்தளம் மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று நீதி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தலா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபரின் திடீர் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த கோழிக்கறி விற்பனை நிலையத்தின் உரிமையாளரான பி.எம்.ஜனாப் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாப்ரி ரஹீமின் மைத்துனர் (சகோதரியின் கணவர்) என்பது குறிப்பிடத்தக்கது.