வன்னிக் காட்டில் விடுதலைப் புலிகளின் தலைவரை நேருக்கு நேர் சந்திக்கவிருந்த மகிந்த! உதய கம்மன்பில

மகிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகளுடன் போர் செய்ய நினைக்கவில்லை. சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார். “நான் வன்னிக் காட்டுக்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடன் நேருக்கு நேர் பேச்சு நடத்துவேன்” என மகிந்த சிந்தனையில் அவர் குறிப்பிட்டிருந்தார் என கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

நாமே அவரைப் போரை நோக்கித் தள்ளினோம் என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் மகிந்தவின் நிழலில் நாம் வெற்றி பெறவில்லை, மகிந்தவுக்குத்தான் நாம் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம், இனிமேல் மகிந்தவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாத நிலையில் இருந்தார் மகிந்த ராஜபக்ச.

அப்போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்த நாங்கள் மகிந்தவுடன் இணைந்து கடுமையாக உழைத்தோம். 50.1 என்ற வீதத்தில் மயிரிழையில் மகிந்தவை வெல்ல வைத்தோம்.

அவர் விடுதலைப்புலிகளுடன் போர் செய்ய நினைக்கவில்லை. சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார்.

‘நான் வன்னிக் காட்டுக்குச் சென்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருடன் நேருக்கு நேர் பேச்சு நடத்துவேன்’ என மகிந்த சிந்தனை யில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாமே அவரைப் போரை நோக்கித் தள்ளினோம். போருக்கு ஆதரவான மக்கள் நிலைப்பாட்டை உருவாக்கினோம்.

போரின் வெற்றியை நோக்கி அவரை வழிநடத்தினோம். அவரை ஜனாதிபதியாக்கியதும் நாமே. போரை வெல்ல வைத்ததும் நாமே. போரை வென்ற பிறகுதான் தேர்தல் கேட்டோம்.

இல்லாத மகிந்தவை உருவாக்கி அவருக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பின்பே தேர்தல் கேட்டோம். ஆகையால், மகிந்தவின் நிழலில் நாம் வெற்றி பெறவில்லை. மகிந்தவுக்குத்தான் நாம் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம் என தெரிவித்துள்ளார்.