ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு : பல கட்சிகள் புறக்கணிக்க தீர்மானம்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல கட்சிகளினதும் தலைவர்கள் உட்பட அனைத்து கட்சிகளின் பங்குபற்றலுடன் சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். எனினும், பல கட்சிகள் பங்குபற்றாமலிருக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (26) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சர்வகட்சி மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த சர்வகட்சி மாநாடு தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் அமையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி நடத்தப்பட்ட சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடு இந்த கூட்டத்தில் எட்டப்படவுள்ளது.

அத்தோடு நாட்டில் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தனிநபர் வருமான வரி அதிகரிப்பு மற்றும் மின்துண்டிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் கட்சிகள் தமது நிலைப்பாடுகளை ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.