Home இந்திய செய்திகள் பிப்ரவரி 4- ஈழத்தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்ட நாள்! தொல்.திருமாவளவன் அறிக்கை

பிப்ரவரி 4- ஈழத்தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்ட நாள்! தொல்.திருமாவளவன் அறிக்கை

downloadஈழத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போராட்டங்களை முன்னெடுக்கும் என தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1948 பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கைக்கு விடுதலை வழங்கினார்கள்.

சுதந்திரத்தின் பெயரால் நடைபெற்ற அதிகாரக் கைமாற்றம் உண்மையில் சிங்களப் பேரினவாதிகளின் அரசையே நிறுவியது. இதன் மூலம் தமிழீழம் சிங்கள ஆதிக்கத்திற்குட்பட்ட அடிமைத் தேசமாக்கப்பட்டதே இலங்கையின் சுதந்திர நாள்.

கடந்த 69 ஆண்டுகளாக இலங்கையை ஆண்டுவரும் இரு பெரும் சிங்களக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஈழத் தமிழர்களை ஒடுக்குவதிலும் தமிழர்களைப் படுகொலை செய்வதிலும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என்பதே வரலாறு.

1956 சூன் 5ஆம் நாள் தனிச் சிங்களச் சட்டம் இயற்றப்பட்டது.

1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கா நிறைவேற்றிய புதிய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் சிறிலங்கா குடியரசானது.

1978ஆம் ஆண்டு ஜெயவர்த்தனா சிறிலங்கா குடியரசுக்கான இரண்டாம் அரசமைப்புச் சட்டத்தை இயற்றிக்கொண்டார்.

இந்த இரு அரசமைப்புக்களுமே ஒற்றையாட்சி முறையை வலிமைப்படுத்தியதோடு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வலுப்படுத்தியது.

தமிழின உரிமைக்காக தந்தை செல்வா நிறுவிய தமிழரசுக் கட்சி ஒரு கூட்டாட்சி அரசமைப்பில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டிப் போராடியது.

தமிழ் மக்களின் போராட்டங்களின் பயனாகவே சிங்கள ஆட்சியாளர்கள் தந்தை செல்வா அவர்களோடு அடுத்தடுத்துச் சில உடன்படிக்கைகளைச் செய்தபோதிலும் அவை யாவும் கிழித்தெறியப்பட்டன.

இனியும் சிங்களவர்களோடு சேர்ந்து வாழமுடியாது என்ற நிலையில் தமிழமைப்புக்கள் 1976ஆம் ஆண்டு வட்டுக் கோட்டையில் ஒன்றுகூடி தமிழீழத் தனியரசை நிறுவத் தீர்மானம் இயற்றின.

1977 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழீழக் குடியரசு அமைத்திட சனநாயகக் கட்டளை வழங்கினர்.

அதன்பின் 1983 சூலைப் படுகொலை முதல் 2009 மே முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை தமிழீழ மக்களுக்கு எதிரான இன அழிப்புக்கு என்றென்றும் இரத்தச் சான்றுகளாய் நிற்கும். டட்லி சேனநாயக்கா முதல் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா வரை, சாலமன் பண்டாரநாயக்கா முதல் மைத்திரிபால சிறிசேனா வரையிலான அனைத்துப் பேரினவாதிகளும் தமிழின அழிப்பின் கொலைக் கூட்டாளிகளே ஆவர்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுவந்த தமிழீழ அரசைக் கொடிய முறையில் நசுக்கி பல்லாயிரக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களப் பேரினவாத அரசிற்குத் துணைபோன இந்தியத் தேசமும் பிற வல்லாதிக்க அரசுகளும் இப்போது தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கவே திட்டமிட்டுச் செயலாற்றி வருகின்றன.

2015 செப்டம்பரில் ஐ.நா.மனித உரிமை மன்ற புலனாய்வு அறிக்கை நமக்குக் கிடைத்தது.

ஆனால், அக்டோபரில் அந்த அறிக்கையை முழுவீச்சில் செயலிழக்கச் செய்யும் தீர்மானம் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை அரசுகளின் கூட்டுச் சதியால் நிறைவேற்றப்பட்டது.

போர் முடிந்து ஏழாண்டு ஆன பிறகும் போர்க்கைதிகளில் பெரும்பாலானோர் விடுதலை செய்யப்படவில்லை.

அவர்களை அரசியல் கைதிகளாக ஏற்கவும் சிங்கள அரசு முன்வரவில்லை.

2009 பின்பு சிங்கள ஆக்கிரமிப்புப் படை ஈழமண்ணிலே அகலக்கால் பதித்து நிற்கின்றது.

வடக்கு கிழக்கின் எல்லைக் கிராமங்கள் மெல்ல மெல்ல விழுங்கப்பட்டு சிங்கள இராணுவ சிங்களமயப்படுத்தல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று ஈழத்தில் உள்ள தமிழ் மக்களுக்கான தலைமைகளை தனது பொறிக்குள் சிக்கவைப்பது, புலம்பெயர் அமைப்புக்களைப் பிளவுபடுத்துவது, தமிழக-ஈழத்து மீனவர்களுக்கிடையில் சகோதர யுத்தத்தை உருவாக்குவது, அதன் மூலம் தமிழகத்தில்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டக்களத்தை பலவீனப்படுத்துவது போன்ற கூட்டுச் சதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தமிழீழத் தலைவர்கள் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.

இந்நிலையில், இனக்கொலை, போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்கப் பன்னாட்டு நீதிப்பொறிமுறை, அரசியல் தீர்வுக்குப் பொது வாக்கெடுப்பு போன்ற அடிப்படைக் கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40ஆம் ஆண்டை முன்னிறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக இளையோர் அமைப்பு, அனைத்துலக ஈழத் தமிழர் மக்கள் அவை ஆகிய மூன்று புலம்பெயர் அமைப்புக்கள் ஓரணியில் திரண்டிருப்பதும், ஈழத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றிருப்பதும், ஈழத்தில் காணாமல் போனோரைத் தேடும் உறவினர்கள் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் சனநாயகரீதியான போராட்டங்கள் எமக்கு நம்பிக்கை அளிக்கிறது.

ஈழத்தில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சனநாயகரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை இத்தளத்தில் தொடர்ந்து களமாடுவோம் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.